Do not give permission to private company in cellphone towers - telecom operators darna ...

தருமபுரி

செல்லிடப்பேசி கோபுரங்களில் தனியார் துணை நிறுவனத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று தொலைத்தொடர்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், பாரதிபுரம் தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் தொலைத்தொடர்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு எஸ்.என்.இ.ஏ. மாவட்டச் செயலர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல்.யு மாவட்டச் செயலர் பி.கிருஷ்ணன் வரவேற்றார். என்.எப்.டி.இ மாவட்டச் செயலர் கே.மணி, மாநில நிர்வாகி எல்.கண்ணன், பிஎஸ்என்எல்யு மாநில நிர்வாகி எஸ்.அழகிரிசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

"தொலைத்தொடர்பு நிறுவன செல்லிடப்பேசி கோபுரங்களில் தனியார் துணை நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும்" என்று இதில் வலியுறுத்தப்பட்டது. 

தர்னாவில், தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், ஊழியர் சங்கத்தினர் திரளானோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.