Do not follow the law plans if you do not want to walk - Orders Order

நாமக்கல்

சட்டத் திட்டங்களையும் முழுமையாக பின்பற்றி சல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என்று சல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மத்துருட்டு கிராமம் திம்மநாய்க்கன்பட்டி அருகில் உள்ள வேம்பாக்கௌண்டன்புதூரில் இன்று சல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இதனையொட்டி சல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் நேரில் சென்று பார்வையிட்டு, முன்னேற்பாடு பணிகளைக் குறித்து ஆய்வு நடத்தினார்.

சல்லிக்கட்டு போட்டி நடத்துவதை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவிலான சல்லிக்கட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்ட அளவிலான சல்லிக்கட்டு குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட அளவிலான குழுவோடு இணைந்து மத்துருட்டு கிராமம் வேம்பாக்கௌண்டன்புதூரில் சல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு குறித்து ஆட்சியர் ஆசியா மரியம் கூறியது:

“அரசு விதித்துள்ள அடிப்படை விதிகள் மற்றும் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே சல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது.

எனவே, சல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும், சட்டத் திட்டங்களையும் முழுமையாக பின்பற்றி சல்லிக்கட்டு நடத்திட வேண்டுமென சல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் முழுமையாக மேற்பார்வையிடும்” என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமசாமி, நாமக்கல் உதவி ஆட்சியர் ராஜசேகரன், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் அழகப்பன், ராசிபுரம் தாசில்தார் ரத்தினம், பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்பட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.