பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் வழக்கு: ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை எனக் கூறி இருவரையும் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் பொன்முடி உடனடியாக இழந்தார். மேலும், பொன்முடி எம்.எல்.ஏ.வாக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அத்துடன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம், பொன்முடியால் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் தொடர முடியும் என்ர நிலை உருவானது.
இதையடுத்து, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்த அறிவிக்கையை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றுக் கொண்டது. தொடர்ந்து, பொன்முடியை அமைச்சராக நியமிக்கவும், அவருக்கு உயர் கல்வித்துறையை ஒதுக்கிடவும் கோரி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், அதனை தமிழ்நாடு ஆளுநர் ஏற்கவில்லை. பொன்முடிக்கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விடுவிக்கப்படவில்லை என்பதால் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என கூறுவதற்கு ஆளுநர் யார் என உச்ச நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியது.
ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது சட்டவிரோதமானது என எவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் கூற முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
ஒரு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால், அங்கு தண்டனை இல்லை என்றுதான் பொருள். தண்டனையே அங்கு இல்லாத போது கறைபடிந்தவர் என்று சொல்ல முடியாது. எந்த களங்கமும் இதில் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பாஜகவுக்கு இன்று இரண்டு இடத்தில் குட்டு: ஒன்று உச்ச நீதிமன்றம்; மற்றொன்று தேர்தல் ஆணையம்!
“உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும்? ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு தெரியாதா? தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி உச்ச நீதிமன்றத்துடன் விளையாடுகிறாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுகிறாரா?” எனவும் உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அந்த நபர்/ அமைச்சர் குறித்து எனக்கு மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனப்படியே நாம் செயல்பட வேண்டும். ஆளுநர் மாநிலத்தின் சம்பிரதாய தலைவர் மட்டுமே. தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் காட்டம் தெரிவித்தது.
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம். நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை எனவும் ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.