மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு: நிறைவு செய்யும் திமுக!

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

DMK plans to complete seat sharing talks within a week for Lok Sabha election 2024 smp

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. எனவே, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையேல், பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.

அதேசமயம், திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி கட்சிகள் அப்படியே தொடர்கின்றன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அடையாளம் கண்டு தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய திமுக முடிவு செய்துள்ளதாகவும், மார்ச் 2ஆவது வாரத்தில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதரபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. காங்கிரஸுடன் ஓரிரு நாட்களில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

மேலும், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகளும் இணைய விருப்பம் காட்டி வருகிறது. இதனால், திமுக கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து குறைத்துக் கொண்டு போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், திமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவே விருப்பம் காட்டி வருவதாக தெரிகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸை தவிர இதர கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளே வழக்கமாக ஒதுக்கப்படுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற சில காரணங்களால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்து கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது.

திமுக கூட்டணியில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை கேட்கிறது. ஆனால், 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறி வருகிறது. கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட தேனியில் மட்டுமே அக்கூட்டணி தோல்வியடைந்தது. எனவே, 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறி வருவதாக தெரிகிறது.

பல்டி அடிக்க காத்திருக்கும் எம்எல்ஏக்கள்.? அதிமுக டூ பாஜக, பாஜக டூ அதிமுக செல்லப்போவது யார்.? வெளியான தகவல்

அதன்படி, விருதுநகர், கன்னியாகுமரி, கரூர், அரக்கோணம், கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வட சென்னை, மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனவும், மதிமுகவுக்கு திருச்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர், நாகப்பட்டினம், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை, மனித நேய மக்கள் கட்சிக்கு வேலூர், விசிகவுக்கு திருவள்ளூர், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில், மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படும் என தெரிகிறது. எஞ்சிய தொகுதிகளில் திமுக போட்டியிடும் என தெரிகிறது.

எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39  தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனால், அக்கட்சி தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios