MK Stalin: திமுகவில் இதுவரை இல்லாத வகையில் அதிரடி முடிவுகளை மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளார். இதன்மூலம் . எ.வ.வேலு, ரகுபதி உள்பட 13 சீனியர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டு விட்டது. ஆளும் கட்சியான திமுக, பெரிய கட்சியான அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி அரசியலில் மாயாஜாலம் நிகழ்த்தி விட்டார் தவெக தலைவர் விஜய். இது போதாதென்று திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள விஜய், திமுகவின் தூக்கத்தை முழுமையாக கெடுத்து விட்டார் என்றே கூற வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற திமுக தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது.
திமுகவில் அதிரடி மாற்றம்
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவில் இதுவரை இல்லாத வகையில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளன. அதாவது திமுக கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
இதையும் படிங்க:கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது ஏன் தெரியுமா? அவரே விளக்கம் அளித்த வைரல் கடிதத்தை பாருங்க!
திமுகவில் பொறுப்புகளுக்கு வயது வரம்பு நிர்ணயம்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.
சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒருவருக்கு இரண்டு முறை மட்டுமே பதவி
வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும் போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.
சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்பது உள்பட பல்வேறு அதிரடி தீர்மானங்கள் திமுகவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:Government Housing Scheme: ரூ.3 லட்சத்தில் வீடு, மனை வாங்கலாம்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?
சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்
திமுகவை பொறுத்தவரை அமைப்புரீதியாக வலுவான கட்டமைப்பு கொண்ட கட்சி. ஆனால் அரசியலில் கத்துக்குட்டியான தவெகவிடம் அக்கட்சி படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக பொறுப்புகள் வழக்கப்பட்டதும், இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதுமே ஆகும். இதனால் தான் எதிர்கால தேர்தல்களில் தவெகவை வீழ்த்த கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் சீனியர்களின் பதவிக்கு வயது நிர்ணயம் செய்யும் முடிவை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின்.
13 சீனியர்களின் பதவி காலி
மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இப்போது மாவட்ட செயலாளர்களாக இருக்கும் சீனியர்கள் எ.வ.வேலு, ரகுபதி, செஞ்சி மஸ்தான், சுந்தர், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம், அனிதா ராதாகிருஷ்ணன், கோ.தளபதி, ஆர்.காந்தி, ராமகிருஷ்ணன், முத்துசாமி, ஆவுடையப்பன், சாக்கோட்டை அன்பழகன் ஆகிய 13 பேர் தங்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.


