Karunanidhi: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்த விவகாரம் தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்து கருணாநிதி 1997 ஆம் ஆண்டு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்த விவகாரம் சட்டப்பேரவை மூலம் இன்று தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது 'திமுக ஆட்சியின் ஊழல் தொடர்பான 3 கோப்புகள் எனது டேபிளில் தான் உள்ளது. அதை திறக்க வைத்து விடாதீர்கள்' என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசியிருந்தார். இதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ''அந்த கோப்புகளை திறந்து நடவடிக்கை எடுங்கள். ஏன் பயம்? ஜோசியக்காரன் சொன்னால் தான் கோப்புகளை திறப்பீர்களா? திமுக எதற்கும் அஞ்சாது; அடிபணியாது'' என்று கூறியிருந்தார்.

இதற்கு பின்பு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், ''மஞ்சள் துண்டு போட்ட வரலாறெல்லாம் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்'' என்று கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்ததை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இதன்மூலம் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது ஏன்?

''கடவுள் நம்பிக்கையில்லாத பெரியார் கொள்கையில் உறுதியாக நின்ற கருணாநிதி, ஜோசியக்காரன் சொல் கேட்டு தான் மஞ்சள் துண்டு அணிந்தார்'' என பாஜக, அதிமுக, தவெக கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறுபக்கம், ''உடல்நல பிரச்சனைகளுக்காக மருத்துவர்கள் கூறியதால் தான் கருணாநிதி துண்டு அணிந்தார். முதலில் அணிந்த துண்டு மஞ்சள் நிறம் என்பதால் அது அப்படியே அவரது அடையாளமாக மாறி விட்டது'' என்று திமுகவினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:Three Language Policy : இனி 3 மொழி படிக்கணுமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி கருத்து!

கருணாநிதியே அளித்த விளக்கம்

கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்ததை அப்போதே எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்த நிலையில், தான் ஏன் மஞ்சள் துண்டு அணிந்தேன் என 10.04.1997 ஆம் ஆண்டு திமுக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி விளக்கி இருந்தார். இந்த கடித்தத்தை திமுகவினர் இப்போது வைரலாக்கி வருகின்றனர்.

கருணாநிதி எழுதிய விளக்க கடிதம் இதோ:

உடன்பிறப்பே,

சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு. அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகவும் தொடங்கியது. உடனே நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர். வலது கன்னத்தில் உமிழ் நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது.

உடல்நல பிரச்சனை

வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர். அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்தபிறகு மீண்டும் டாக்டர்கள் கலந்துபேசிக் கொண்டிருந்தனர், அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கிடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது. டாக்டர்கள் வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது.

கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் மலர் மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசிகள் - நண்பர்கள் கழகக் கண்மணிகள்!

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை.. ஒரே வாரத்தில் பல்டி அடித்தாரா முதல்வர் விஜய்? அமித்ஷா முன் பேசியது என்ன?

மருத்துவர்கள் சொன்ன அறிவுரை

கழுத்துப் பகுதியும் முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும் அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையும் கழுத்தின் மேல் பட்டுக கொண்டிருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர் வலியுறுத்திக் கூறினார். அப்படிக் கம்பளிச் சால்வை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினர்.

அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் இது நன்றாக இருக்கிறது இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டனர்.

எனக்குச் சிரிப்பு மேலிடுகிறது

அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைபோல சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல சிலர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன். இந்தச் சால்வை சிலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும் கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர. சீற்றம் பிறக்கவில்லை. அன்புள்ள மு.கருணாநிதி (10.04.1997). கருணாநிதி எழுதிய இந்த கடிதத்தை திமுகவினர் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.