வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணாங்களா? திமுக எம்.பி. சர்ச்சை பேச்சு!
வட மாநிலங்களில் சிவனும், பார்வதியும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்களா என்று தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தர்மபுரி எம்.பி., செந்தில் குமார் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அரசு கட்டுமானங்களில் குறிப்பிட்ட மத சடங்குகளின்படி மட்டுமே பூமி பூஜை செய்யப்படுவதை எதிர்த்து கேள்வி கேட்டு இரண்டு முறை சர்ச்சைகளில் சிக்கினார். அத்துடன் ட்விட்டரிலும் சில சமயங்களில் அவர் பதிவிடும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், வட மாநிலங்களில் மட்டும் சிவனும், பார்வதியும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்களா என்று தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தர்மபுரி எம்.பி. செந்தில் குமார் அண்மையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'வட மாநிலத்தில் சிவன் - பார்வதிக்கு, விநாயகருடன் முடிந்து விட்டது. முருகர் என்பவர் இருப்பது தென்மாநிலத்துக்கு வந்தால் மட்டும் தான் தெரியும். அங்கு, சிவன் - பார்வதிக்கு குடும்ப கட்டுப்பாடு நடந்ததா என தெரியவில்லை.” என பேசினார்.
செந்தில்குமார் எம்.பி.-யின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எந்த கடவுளையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் தனக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். “வட மாநிலத்தில், சிவன்-பார்வதியின் மகன் விநாயகர் என்பதை மட்டும் உறுதி செய்து, தென்மாநிலத்தில் மட்டும் அவர்களின் மகனாக அறியப்பட்ட முருகனையே வழிபட முடியாத நிலையை ஏற்படுத்தி விடுவர் என்பதை சுட்டிக்காட்டவே அதுபோன்று கூறினேன். எந்த கடவுளையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை.” என தெரிவித்துள்ளார்.