ஒன்றியத்திலும் திராடவிட மாடல் ஆட்சி வரும்- கனிமொழி நம்பிக்கை!
ஒன்றியத்திலும் திராடவிட மாடல் ஆட்சி வரும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள பள்ளக்குறிச்சி ஊராட்சியில் 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய கனிமொழி எம்.பி., “ஒரு காலகட்டத்தில் நாம் படிக்கக் கூடாது, குறிப்பாக பெண்களுக்கெல்லாம் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடையாது. மேல்சாதியினர் என்று சொல்லக் கூடியவர்களுக்கு மட்டும்தான் படிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. மற்றவர்களுக்கு எல்லாம் படிக்க வாய்ப்பில்லை, வேலைக்கு போகும் வாய்ப்பில்லை, ஒன்றும் கிடையாது. இந்த சமூகத்தில் மரியாதையும் கிடையாது. ஆனால், இன்று அதிக இளைஞர்கள் இளம் பெண்கள் உயர்கல்வி பெற்றிருக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் திராவிட இயக்கம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர்.” என்றார்.
அந்த வழியிலே நம்முடைய முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டம் என்று கல்லூரியில் படிக்க கூடிய அரசுப் பள்ளியில் படித்திருக்கக் கூடிய பெண்களுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க கூடிய அந்த திட்டத்தை உருவாக்கி தந்திருக்கிறார் எனவும் கனிமொழி எம்.பி. சுட்டிக்காட்டினார்.
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது - உச்ச நீதிமன்றம்!
“முதல் தலைமுறை பட்டதாரிகளுக்காக, சாதி, மதம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் உயர் சாதியில் பிறந்து இருந்தாலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இருந்தாலும் அவர்களுக்கு என்று அந்த கல்விக்கான உதவியை செய்து இன்றைக்கு அனைவரும் படிக்கக்கூடிய வாய்ப்பு; நல்ல வேலைக்கு போகக் கூடிய வாய்ப்பை உருவாக்கி தந்தது தலைவர் கலைஞர்.” என கனிமொழி எம்.பி. குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி., “இப்படித் தொடர்ந்து கல்விக்காக சுயமரியாதைக்காக இந்த மாநிலத்தின் உரிமைக்காக போராடக்கூடிய இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நம்முடைய முதலமைச்சர் அடிக்கடி சொல்லுவது போல திராவிட மாடல் ஆட்சியைத் தான் இன்று மற்ற மாநிலங்களும், ஏன் ஒன்றிய அரசாங்கமும் பின்பற்றக் கூடிய ஒரு நிலையை உருவாக்கிக் காட்டி இருக்கிறோம். விரைவில் அங்கேயும் ஒரு மாற்றம் வந்து, அங்கேயும் ஒரு திராவிட மாடல் ஆட்சி உருவாக கூடிய நிலை விரைவில் வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறினார்.