நாங்க பிரிவினைவாதிகள் இல்லை; நீங்கதான் எங்களை தூண்டுகிறீர்கள் என்று திமுக எம்பி ஆ. ராசா மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் மொழி குறித்த கருத்துகளுக்கு திமுக எம்பி ஆ.ராசா சனிக்கிழமை பதிலளித்தார். பிரதமர் நாட்டில் பிரிவினையை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.


பிரதமரின் நிலைப்பாடு குறித்து ஆ. ராசா கேள்வி எழுப்பினார். பாஜக பிரிவினையை வளர்ப்பதாக அவர் திட்டவட்டமாக கூறினார்.
"சிலர் மொழியின் பெயரால் நாட்டை பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று பிரதமர் ஒரு நிகழ்ச்சியில் கூறினார். மொழியின் பெயரால் நாட்டை பிரிப்போம் என்று நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் மதத்தின் பெயரால் நாட்டை பிரிக்க முயற்சிக்கிறீர்கள் என்று நாங்களும் சந்தேகிக்க வேண்டாமா? பிரதமர் தொடர்ந்து மொழி பிரச்னையை குறித்து பேசினால் கடுமையான எதிர்ப்பு இருக்கும். 

"நீங்கள் இன்னும் மொழியைப் பற்றி பேசினால், எங்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 'மோடி திரும்பி போ' என்று சொல்வார். நாங்க (திமுக எம்பிக்கள்) நாடாளுமன்றத்தில் 'வாய மூடு மோடி' என்று சொல்வோம். எங்கள் கட்சி பிரிவினைவாதத்தை ஆதரிக்கவில்லை. நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல. ஆனால் நீங்கள்தான் எங்களை தூண்டுகிறீர்கள். பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை தமிழ்நாட்டில் புகுத்த பார்க்கிறது. பாஜகவின் கனவு ஒருபோதும் பலிக்காது'' என்றார். 

இதற்கு முன்னதாக நேற்று டெல்லியில் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ''இந்திய மொழிகளுக்கு இடையே எப்போதும் பகைமை இருந்தது இல்லை. அவை ஒன்றுக்கொன்று செல்வாக்கு செலுத்தி வளப்படுத்துகின்றன. மொழியின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்கும் தவறான எண்ணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியையும் அரசாங்கம் பிரதான மொழியாக கருதுகிறது'' என்றார்.

முன்னதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தை கடுமையாக விமர்சித்தார். அரசியல் உள்நோக்கத்துடன் " கற்பனையான கவலைகளை" எழுப்புவதாக குற்றம் சாட்டினார்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதான், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 எந்த மொழியையும் ஒரு மாநிலத்தின் மீது திணிக்கவில்லை என்று வலியுறுத்தினார். "NEP எந்தவொரு மொழியையும் ஒரு மாநிலத்தின் மாணவர்களிடம் திணிக்க பரிந்துரைக்கவில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அதாவது, NEP தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க எந்த வகையிலும் பரிந்துரைக்கவில்லை," என்று தர்மேந்திர பிரதான் கூறி இருந்தார்.

கல்வியை அரசியலாக்காதீங்க.! எந்த மொழியையும் திணிக்கவில்லை- ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பரபரப்பு கடிதம்