விஜய் ரசிகர்களை இனி தற்குறிகள் என்று விமர்சிக்க வேண்டாம் என திமுகவினருக்கு அக்கட்சியினர் எம்எல்ஏ எழிலன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களுடன் நாம் உரையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. இதில் நடிகர் விஜய்யின் தவெக மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. திமுகவை கடுமையாக விளாசி வரும் விஜய், திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் நேரடி போட்டி என்று கூறியுள்ளார்.

தற்குறிகள் என விமர்சிக்கும் திமுக, நாம் தமிழர்

தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள், 18 மற்றும் 20 வயது இளைஞர்கள் ஆவார்கள். அவர்களுக்கு அரசியல் குறித்த எந்த புரிதலும் இல்லை. அவர்கள் அனைவரும் தற்குறிகள் என்று திமுகவினர், நாம் தமிழர் கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய் ரசிகர்களை இனிமேல் தற்குறிகள் என திட்டக்கூடாது என திமுக எம்.எல்.ஏ எழிலன் வேண்டுகோள் விடுத்துள்ளர்.

இனி தற்குறிகள் என திட்டக் கூடாது

‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா' நிகழ்ச்சியில் பேசிய எழிலன், ''தற்குறிகள் தற்குறிகள் என்று ஒரு பிற்படுத்தப்பட ஒடுக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களை நாம் விமர்சனம் செய்து வருகிறோம். இது மிகவும் தவறானது ஆகும். நாம் அவர்களிடம் பேசவில்லை. பேசாமல் போனது நம்முடைய தவறு. நம்மளிடம் கல்லூரி ஆசிரியர்கள் பேசவில்லை. நம்மிடம் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சமூக நிதி அரசியல் சொல்லிக் கொடுக்கவில்லை.

நாம் உரையாட வேண்டும்

நாம் பேசவில்லை. ஏனெனில் அவன் மொழி நமக்கு தெரியவில்லை. நாம் உரையாடலை ஆரம்பித்தேம் என்றால் அவனிடம் பேசலாம். அவனை மனமாற்றம் செய்யலாம். அவர்களின் தலைமைகள் (விஜய்) சுயநலத்துடன் செல்கிறது. ஆனால் அங்கு இருக்கும் பசங்க ரசிகர்கள் கூட்டம் தான். அவர்களிடம் நாம் உரையாடலை தொடங்க வேண்டும்.

அவர்கள் சங்கிகள் இல்லை

அவர்களை விமர்சனம் செய்யக் கூடாது. நாம் சில நேரங்களில் அவர்கள் மீது வெறுப்புணர்சி கொள்கிறோம். அவர்கள் சங்கிகள் கிடையாது. ஆகவே நாம் உரையாடலை தொடங்க வேண்டும். இங்குள்ள இளம் பேச்சாளர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது'' என்று தெரிவித்தார்.