திமுகவின் முருகர் மாநாடு உண்மையானதல்ல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நடத்தினால் எப்படி முருகர் அருள் கிடைக்கும் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

முதலமைச்சர் ஸ்டாலின் குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: திமுக அண்மையில் மதுரையில் நடத்திய முருகர் மாநாடு உண்மையான மாநாடு கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளைக் கல்லாக நினைத்துத் தூக்கிப் போட்டு உடைப்பவர்கள், மற்ற மதங்களை இழிவாகப் பேசுபவர்கள் போய் முருகர் மாநாடு நடத்தினால், முருகர் எப்படி அவர்கள் பக்கம் போவார்? என்று கேள்வி எழுப்பினார்.

திமுகவுக்கு சாதகமான வாக்கு வங்கியாக மாற்ற முயற்சி

மேலும், இது முழுக்க முழுக்க ஒரு பக்தர் மாநாடுதான். நாங்கள் யாரையும் தவறாக இடத்திற்குக் கொண்டு செல்லவோ, குறை சொல்லவோ இல்லை. பிற மதங்களையோ, யாரையும் புண்படுத்திப் பேசவில்லை. இந்த மாநாட்டில் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவும் இல்லை. இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். இதைத் தேர்தல் பயன்பாட்டிற்காகவோ, மக்களைக் குழப்புவதற்காகவோ, வாக்கு வங்கியாக மாற்றவோ நாங்கள் முயற்சிக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தை திமுக தனக்குச் சாதகப்படுத்த முயற்சிப்பதாகக் கேட்டபோது, "இது பக்தர்களுக்குப் பொதுவானது. திமுக தனது பெயருக்காக முயற்சிக்கிறது. அவர்கள் முதல் ஒரு முருகன் மாநாடு நடத்தினார்கள். அது முருகர் பக்தி மாநாடா என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நடத்துவது முருகர் பக்தர்களுடைய மாநாடு. ஆனால் இப்போது அவர்கள் அதைத் திசைதிருப்பி, திமுகவுக்குச் சாதகமான வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து திமுக ஜெயிச்சதாக வரலாறு கிடையாது

2026 சட்டமன்றத் தேர்தலிலும், 2031, 2036 தேர்தல்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவது குறித்துக் கேட்டபோது, நயினார் நாகேந்திரன் அந்தக் கூற்றை மறுத்தார். "1989-ல் எம்.ஜி.ஆருடைய மறைவுக்குப் பின்னால் ஒரு இரண்டு வருஷம் ஆட்சியில் இருந்தாங்க. 91-ல் அம்மா ஆட்சிக்கு வந்தாங்க. அப்புறம் 96-ல் ஆட்சிக்கு வந்தாங்க. தொடர்ந்து அவங்க ஆட்சியில் இல்லை. 2001-ல் அம்மா ஆட்சிக்கு வந்தாங்க. 2006-ல் மைனாரிட்டி கவர்மெண்ட். எங்களுடைய கூட்டணி முறையாக அமைந்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். ஆனால் 2011-லும் அம்மாதான், 2016-லும் அம்மாதான் ஆட்சிக்கு வந்தாங்க. தொடர்ந்து திமுக இன்று ஜெயிச்சதாக வரலாறு கிடையாது. வரலாறு மாறப்போவதில்லை. அதனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

தமிழக முதலமைச்சராக இபிஎஸ்

மேலும், மதிப்புக்குரிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். அதற்கு அடுத்த தலைமுறை ஆட்களும் தயாராக இருக்கிறார்கள். அதை நிச்சயமாக யாரும் விரும்ப மாட்டார்கள். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று அமித்ஷா கூறியது குறித்த கேள்விக்கு, அதிமுகவே ஆட்சி அமைக்க மக்கள் விரும்ப மாட்டார்கள். தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள். அதைப் பற்றி அமித்ஷா அவர்களும், அதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்புக்குரிய பழனிசாமி அவர்களும் பேசுவார்கள் என்றார். இதில் பழனிசாமியின் பெயரைச் சொல்லாதது குறித்துக் கேட்டபோது, " தமிழக முதலமைச்சராக எடப்பாடியார் வருவார் என்று இப்போது பேசக்கூடாது. அமித்ஷா அவர்கள் ஏற்கனவே அவருடைய தலைமையில் ஆட்சி அமையும் என்று சொல்லியிருக்கிறார்கள்.