இந்த ஆட்சி திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தான்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இந்த ஆட்சி தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் என முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி திமுக அரசு பொறுப்பேற்றது. இன்றுடன் 2 ஆண்டுகள் முடிந்து 3வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சனிக்கிழமை நடந்த விழாவில் திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
'ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி' என்ற தலைப்பில் சாதனை மலரையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். திமுக அரசின் 2 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திமுக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, பொன்முடி, டி.ஆர். பாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை மையம் தகவல்
இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், "இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான். ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், ஓட்டு போடாதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடாமல் இருந்துவிட்டோமே என்றும் வருந்தும் வகையிலும் ஆட்சி இருக்கும் என்று கூறினேன். அதன்படி ஆட்சி நடைபெற்று வருவதாக நம்புகிறேன்" என்று கூறினார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்குக் கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
"விமர்சனங்களை பற்றி கவலைப்படமாட்டேன். நல்லவைகளை எடுத்துக்கொள்வேன், கெட்டவைகளை புறம் தள்ளுவேன்" எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். பின்னர், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்ற முதல்வர், தன் தாயாரிடம் ஆசி பெற்றார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், "ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும், "தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும்!" எனவும் குறிப்பிட்டுள்ளார்.