சென்னை புறநகர் வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் திமுக பிரமுகர், பெட்ரோல் குண்டு வீசி படுகொலை செய்யப்படார்.

வண்டலூர் அடுத்த ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் (43), காஞ்சிபுரம் மாவட்ட திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளர். ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் உள்பட சில தொழில்களை செய்து வந்தார்.

நேற்று இரவு விஜயராஜ், ஓட்டேரியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார். அவர் தனியாக அலுவலகத்தில் இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள் சிலர், கார் மற்றும் பைக்கில் அங்கு சென்றன.

வாகனங்கள் வரும் சத்தம் கேட்டு, விஜயராஜ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். உடனே அந்த மர்மகும்பல், அவர் மீது, மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசினர். அதில் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்த அவரை, மர்மநபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த விஜயராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால், அப்பகுதியில் முழுவதும் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து வண்டலூர் டிஎஸ்பி முகிலன், ஓட்டேரி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், கடந்த 3 முறை உள்ளாட்சி தேர்தலில் விஜயராஜ், ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டார். ஆனால், தோல்வியடைந்தார். வரும் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருந்தார். இதில், அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்துள்ளது.

இதனால், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அவரை திட்டமிட்டு கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றனர். மேலும், கொலைக்கு காரணம் தொழில் போட்டியா? எனவும் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தில், கடந்த 2 வாரத்துக்கு முன் திமுக மாவட்ட பிரதிநிதி வில்சன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் சதீஷ் என்பவர் கொலையானார்.

செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக கொலை சம்பவங்கள் குறைந்து வந்தது. தற்போது, மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.