தமிழகத்தில் இன்னும் 6 மாத காலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பலம் வாய்ந்த கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றும் முனைப்பில் திமுக, அதிமுக, தவெக இடையே போட்டி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை தீவிரம் காட்டி வருகின்றனர். கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது செங்கோட்டையனின் இணைப்பைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது.
கொங்கு மண்டலம் என்பது கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இங்கு மொத்தமாக சுமார் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை மொத்தமாக வாரி சுருட்டுவதில் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன.
கொங்கு மண்டலம் என்பது ஜெயலலிதா காலம் முதலே அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. தற்போது அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் இருந்து எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், செந்தில் பாலாஜி என பல முக்கிய தலைவர்கள் கண்டெடுக்கப்பட்டனர். ஆனால் அதிமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, செங்கோட்டையன் ஆகிய இருவரும் பிரிந்து ஒருவர் திமுகவுக்கும், மற்றொருவர் தமிழக வெற்றி கழகத்திற்கும் சென்று விட்டனர்.
கொங்கு மண்டலத்தில் இருந்து வந்த பிரபலம் என்ற காரணத்திற்காகவே செந்தில் பாலாஜிக்கு திமுக அமைச்சரவையில் மின்வாரியம், மதுவிலக்கு ஆயத்தீர்வை என இரு முக்கிய துறைகள் வழங்கப்பட்டன. ஆனால் நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், கட்சிக்குள் அவருக்கு வழங்கப்படும் சுதந்திரத்தில் எந்தவித குறைபாடும் இல்லை.
இதே போன்று 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செங்கோட்டையனுக்கு தவெகவில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த முறை கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றுவது யார் என்பதில் அதிமுக, திமுக, தவெக இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.


