குடைச்சலாக மாறும் செங்கோட்டையன்..! ஸ்கெட்ச் போட்டு தூக்கும் தவெக..! சிக்கலில் இபிஎஸ்..!
மூன்றில் ஒரு பங்கு இடங்களை அதாவது சுமார் 80 தொகுதிகளை வேறு கட்சியில் இருந்து வருபவர்களுக்கு தரும் உத்திக்கு தயாராகிறது தகெக. கோவை மண்டலத்தில் இருந்து இந்த பணி தொடங்கும். செங்கோட்டையன் அதன் தள கர்த்தராக இருப்பார் என்று சொல்கிறார்கள்.

தவெகவில் இணைந்த கையோடு மேலும் பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு வருவார்கள் என்று பேசினார் செங்கோட்டையன். அமைச்சர்களை மட்டும் அல்ல நல்ல கள அனுபவம் கொண்டவர்கள் பலரையும் தூக்கும் திட்டத்தில் இருக்கிறது தவெக. அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், 2026 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாதவர்கள் பலரையும் குறி வைத்து காய் நகர்த்துகிறது என்ற பேச்சு அரசியல் வட்டத்தில் நிலவுகிறது.
தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளில் கடந்த 2021 தேர்தலில் 191 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிட்டது. ஏஞ்சிய இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. இந்த முறை கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் அதிமுக போட்டியிடும் எண்ணிக்கை மேலும் சுருங்கும் என்கிறார்கள். ஏனென்றால் பாஜகவுக்கு 25 இடங்களை ஒதுக்க வேண்டியது இருக்கம். பாமகவும் 25 எண்ணிக்கைக்கும் குறையாது. அடுத்து தேமுதிக இருக்கிறது.
இந்த மூன்று கட்சிகளையும் 60 தொகுதிகளுக்குள் அடக்கினாலும் அடுத்து சிறிய கட்சிகள் இருக்கின்றன. ஆக 160 முதல் 170 தொகுதிகளுக்குள் தான் அதிமுக போட்டியிட முடியும். இதையே வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் குறைந்தது நான்கில் ஒரு இடத்தை இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்க வேண்டியிருக்கும். எந்த தொகுதிகள் எல்லாம் கூட்டணி கட்சிகளுக்கு போகும் என்பது அதிமுகவினரால் ஊகிக்க முடியாதது அல்ல. அதேபோல அதிமுகவுக்கே தொகுதி கிடைத்தாலும் தனக்கு கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் அமையும் கூட்டணி தனக்கு சாதகமாக இருக்குமா? எனும் கேள்விகளோடு பலர் இருக்கிறார்கள். இது சம்பந்தமான பேச்சுகள் ஏற்கனவே கட்சிகள் நிலவுகின்றன.
உதாரணமாக கடந்த தேர்தலில் கோவை தெற்கில் வெற்றி பெற்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கு தொகுதியை கூறி வைத்து இருக்கிறார். இது அந்த தொகுதியில் தற்போதைய அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜுனனின் வாய்ப்பை பாதிக்கக்கூடும். இதே போல் பவானிசாகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ பன்னாரி செங்கோட்டையனின் ஆதரவாளர் என்று பேசப்படுவதால் அவருக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
சென்னை வேளச்சேரி. தி. நகர் தொகுதிகளை பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் குறி வைத்திருப்பதால் கூறப்படுகிறது. அந்த தொகுதிகளை சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்களும், முன்னாள் எம்எல்ஏக்களுமான வேளச்சேரி அசோக், டி.நகர் சத்யா போன்றோருக்கு வாய்ப்பு கிடைப்பதில் பெரும் போராட்டமே நடக்கலாம். நயினார் நாகேந்திரன் நெல்லையையும், சரத்குமார் தென்காசியையும் மீண்டும் கேட்பார்கள் என்பதால் தச்சை கணேசராஜா, தென்காசி செல்வமோகன் தாஸ் பாண்டியன் ஆகியோருக்கு அதிமுகவால் வாய்ப்பளிக்க முடியாமல் போகலாம். முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் மிகுந்த செல்வாக்கு கொண்டவர். ஆனால் சிறுபான்மையினர் கணிசமாக வசிக்கும் இந்த தொகுதியில் பாஜக உடனான கூட்டணி அவருடைய வெற்றி வாய்ப்பை கேள்விக்கு உள்ளாக்கக்கூடியது.
இப்படி குமரி தொடங்கி சென்னை வரையில் நீண்ட பெயர் பட்டியல் பேச்சில் இருக்கிறது. இவர்களை எல்லாம் தான் தவெகவும்,செங்கோட்டையனும் குறி வைக்கிறார்கள். அதிமுக மட்டுமல்ல தேர்தல் நெருங்கும்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களுடன் பேசலாம் என்ற எண்ணத்தில் தவெக இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களை எல்லாம் இழுப்பதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க திட்டமிட்டு இருக்கிறது தவெக. பிரதான கட்சிகளின் நிர்வாகிகளுக்கு அந்த கட்சிகளில் சீட் கிடைப்பது சவால் என்றால், தவெகவுக்கு 234 தொகுதிகளிலும் முகாம் தெரிந்த வேட்பாளர்களை கண்டுபிடித்து நிறுத்துவது பெரும் சவால்.
ஆகையால் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு இடங்களை அதாவது சுமார் 80 தொகுதிகளை வேறு கட்சியில் இருந்து வருபவர்களுக்கு தரும் உத்திக்கு தயாராகிறது தகெக. கோவை மண்டலத்தில் இருந்து இந்த பணி தொடங்கும். செங்கோட்டையன் அதன் தள கர்த்தராக இருப்பார் என்று சொல்கிறார்கள். அதிமுகவிலிருந்து தவெகவுக்கு சென்ற செங்கோட்டையன் தவெகவுக்கு என்ன அனுகூலங்களை எதிர்காலத்தில் பெற்று தருவார் என்று தெரியவில்லை. ஆனால் அதிமுகவுக்கு குடைச்சலாக மாறிக் கொண்டிருப்பார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது
