Asianet News TamilAsianet News Tamil

மக்களவை தேர்தல் கூட்டணி: பிரேமலதா போடும் கண்டிஷன்!

மக்களவை தேர்தல் கூட்டணிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

DMDK premalatha vijayakanth seeking this much constituencies and put condition smp
Author
First Published Feb 5, 2024, 10:42 AM IST

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் காலமானார். அவர் காலமாவதற்கு முன்பு, அக்கட்சியின் பொதுச் செயலாளராக அவரது மனைவி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலை விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கவுள்ளது. விஜயகாந்த் இல்லாமல் அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தலும் இதுவாகும்.

விஜயகாந்த் உயிரிழப்பதற்கு முன்பே அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் கட்சி முழுவதும் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. முக்கிய முடிவுகள் அனைத்தையும் இவர்களே எடுத்து வந்தனர். அதேசமயம், விஜயகாந்த் உடல் நலிவுறத் தொடங்கியபோதே அக்கட்சியும் நலிவடையத் தொடங்கி விட்டது. வாக்கு சதவீதமும் கணிசமாக குறைந்து விட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்த தேமுதிக, கடந்த மக்களவைத் தேர்தலின்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து களம் கண்ட அந்த தேர்தலில் படுதோல்வியே அக்கூட்டணிக்கு மிஞ்சியது. தேனியில் ஓபிஎஸ் மகன் தவிர வேறு யாரும் வெற்றி பெறவில்லை.

இதையடுத்து, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டணிக்கு அதிமுக பிடிகொடுக்கவில்லை. அத்துடன், மிகவும் சொற்பமான தொகுதிகளையே ஒதுக்குவதாக அக்கட்சி தெரிவித்ததால், கடைசி நேரத்தில் அமமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக தோல்வியடைந்தது.

எனவே, மாநில கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெறும் முனைப்பில் மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணியில் இணைய தேமுதிக திட்டமிட்டுள்ளது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து தேமுதிக கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில், பாஜக கூட்டணியில் இணைய பிரேமலதா விஜயகாந்த் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவுடன் தேமுதிகவுக்கு நல்ல உறவு இருக்கிறது. பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, விஜயகாந்த் குறித்து பேசி நெகிழ்ச்சியடைந்தார். மேலும், விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கியும் மத்திய பாஜக அரசு கவுரப்படுத்தியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் பாஜக கூட்டணியில் இணைய பிரேமலதா விரும்புவதாக தெரிகிறது. அதேசமயம், ஒன்றிரண்டு தொகுதிகள் கொடுக்கும் கட்சிகளுடன் இணைய விரும்பாதாக பிரேமலதா, 4 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னை இனி பட்டப்பெயர் வைத்து கூப்பிடாதீங்க.. அது எனக்கு பிடிக்கவில்லை- திமுகவினருக்கு ஆர்டர் போட்ட உதயநிதி

மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால், தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால், கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளில் அக்கட்சி இறங்கியுள்ளதற்கிடையே, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி விட்டது. கடந்த ஏற்கனவே, பாஜக கூட்டணியில் இருந்து பாமக, தேமுதிக விலகிய நிலையில், இது அக்கட்சிக்கு அதிர்சியை அளித்துள்ளது.

பாஜகவுடன் இனிமேல் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை எனவும் அதிமுக அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றவும் பாஜக தலைமை வியூகங்களை வகுத்து வருகிறது. எனவே, அதிமுக பிடிகொடுக்காத பட்சத்தில், பாமக, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் மற்றும் சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios