Asianet News TamilAsianet News Tamil

தேமுதிக பிரமுகர் மொட்டையடித்து முதல்வருக்கு அஞ்சலி…

dmdk person-shaved-for-tribute-to-cm
Author
First Published Dec 7, 2016, 11:23 AM IST


முதலவர் ஜெயலலிதா மறைவையொட்டி, நெல்லையில் அதிமுக தொண்டர்கள் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கிருந்த தேமுதிக பிரமுகரும் மொட்டையடித்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்தினார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு விதங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு காலமானார்.

ஜெயலலிதா மறைவு செய்தி அறிந்த மொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது. அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கில் ஏராளமானோர் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மாலையில் அவரது உடல் எம்ஜிஆர் சமாதி அமைந்துள்ள பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மற்றும் பொது மக்கள் கட்சி பாகுபாடுன்றி அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, தெற்குப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிவகாசி, தேனி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் அஞ்சலி செலுத்தினர். கோவை காந்திபுரம் பகுதியில் ஏராளமானோர் ஒரே இடத்தில் திரண்டு மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

சவுரிபாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் மொட்டை அடித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.

நத்தம் நெச்சி ஓடைபட்டியில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மொட்டை அடித்தும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், சுரண்டை பகுதியில் அதிமுகவினர் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் நெல்லை, பேட்டை காவல் நிலையம் அருகே அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்தினர்.

அப்போது அங்கிருந்த தேமுதிக பிரமுகர் சிறுத்தை முருகன் என்பவரும் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios