தேனி மாவட்டம், சின்னமனூரில் தீபாவளிப்பண்டிகையின் போது சரக்கு அடிக்கும் குடிமகன்களை உற்சாகப்படுத்த, அங்கிரும் தனியார் மதுபார் ஒன்று பலவிதமான ஆஃபர்களை அறிவித்து திக்குமுக்காடச் செய்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு, 500 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து, டாஸ்மாக் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தனியார் பாரின் இந்த விளம்பரம் அதிகாரிகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது.

 தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்து 292 டாஸ்மாக் கடைகளின் மூலம், தினசரி சராசரியாக, 68 கோடி ரூபாய்க்கும், ஞாயிறு உள்ளிட்ட விசேஷ நாளில், 95 கோடி ரூபாய்க்கும். ‘சரக்கு' விற்பனையாகிறது; தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாளில், 100 கோடி ரூபாயை தாண்டுவது வழக்கம்.

கடந்த ஆண்டு, தீபாவளி நாளில், 150 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்த நிலையில், தீபாவளிக்கு முதல் நாளில், 92 கோடி ரூபாய், மறுநாளில், 100 கோடி என, மொத்தம், 342 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது.

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை, அக்., 29 சனிக்கிழமையும், அடுத்த நாள் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், நான்கு நாளில், 500 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதற்காக, வழக்கமான மது சப்ளையை விட, 40 சதவீதம் கூடுதல் சப்ளை கடைகளுக்கு வழங்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், வரும் 30-ந்தேதி தேவர் ஜெயந்தி வருவதால், மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலை பயன்படுத்தி, தேனி மாவட்டம், சின்னமனூரில் இயங்கும் ஒரு தனியார் மதுபார், டாஸ்மாக் செல்லும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ஆஃபர்களை அறிவித்து குடிமகன்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.

அதாவது, 10 குவாட்டர் வாங்குபவர்களுக்கு ஒரு குவாட்டர் இலவசம், 10 பீர் வாங்குபவர்களுக்கு ஒரு பீர் இலவசம், 5 குவாட்டர் வாங்கினால் ஒரு ‘கட்டிங்’ இலவசம் என ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த பாரில் வந்து மது அருந்தும் குடிமகன்களுக்கு 5 வகையான ‘சைடுடிஷ்’ இலவசமாக தரப்ப்படும் எனத் அறிவித்துள்ளது. 

இதனால், அப்பகுதி குடிமகன்கள் தீபாவளிப்பண்டிகையை ‘உற்சாகமாக’ கொண்டாடத் தயாராகிவிட்டனர். 

தீபாவளி கொண்டாடிய காலம் மாறி, இப்போது ‘குடி’யோடு தீபாவளி கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள்...