Disciplinary action correction answer sheets by students - Chief Education Officer Warning ...
வேலூர்
பள்ளிகளில் தேர்வு விடைத் தாள்களை மாணவர்களைக் கொண்டு திருத்தினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு விடைத் தாள்களை மாணவர்களைக் கொண்டு திருத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது.
அது சம்பந்தமான செய்திகளும் நாளிதழ்களில் இடம்பெற்றன. இது தொடர்பாக திருப்பத்தூர் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டது. தலைமை ஆசிரியர் மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் சந்தித்து அது குறித்து விளக்கமளித்தாராம்.
இந்த நிலையில், மாணவர்களைக் கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
அதையும் மீறி செயல்படும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்துள்ளார்.
