Director S.A. Chandrasakar TV Interview

தன்னைவிட விஜய்-க்கு அரசியல் நன்றாக தெரியும் என்றும், நேரடி அரசியல் பேசும் காலா போன்ற படங்களைவிட மெர்சல் போன்ற படங்களில் பேசப்படும் அரசியலைத்தான் மக்கள் விரும்புவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர்த் தயாரித்து நடித்திருக்கும் படம் டிராபிக் ராமசாமி. இந்த திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது பேசிய அவர், சமூகத்துக்காக போராடி வரும் டிராபிக் ராமசாமி, கோமாளிபோல சித்தரிக்கப்படுவதாகவும், அந்த கருத்தை மாற்றுவதற்காகவே இந்த படத்தை தயாரித்திருப்பதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

மேலும் பேசிய அவர், தற்போது சமூக கருத்துக்கள் கொண்ட திரைப்படங்கள் பல வெளியாகின்றன. இது நல்ல தொடக்கம்தான். நேரடியாக அரசியல் பேசும் காலா போன்ற படங்களைவிட, கமர்சியல் கலந்த ஜனரஞ்சகமான மெர்சல் போன்ற படங்களில் பேசப்படும் அரசியலைத்தான் மக்கள் விரும்பி ரசிக்கிறார்கள்.

தன்னைவிட விஜய்-க்கு நிறைய அரசியல் தெரியும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை, விஜய் நேரில் சென்று பார்தத்ததற்கு அவரது மனிதநேயமே காரணம்.

விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தெருவையும், ஊரையும் சுத்தம் செய்வதே அவரின் முதற்கட்ட அரசியல் நடவடிக்கை என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.