Directing the Tamil Nadu and Kerala - Coke Pepsi banned?
தமிழகத்தைத் தொடர்ந்து, நிலத்தடி நீரையும், ஆற்றுநீரையும் பாதுகாக்க, கேரள வர்த்தகர்களும் கோக், பெப்சி விற்பனையை தடை செய்ய ஆலோசித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு ஆதரவாக போராட்டம் நடந்தபோது, மாணவர்கள் சார்பில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் விற்பனை செய்ய வேண்டாம் என வணிகர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விற்பனை நிறுத்தம்
இதை ஏற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் ஆகியோர், மார்ச் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் வணிகர்கள் பெப்சி, கோக் பானங்களை கடைகளில் விற்பனை செய்யமாட்டார்கள் என அறிவித்தனர்.
இதையடுத்து, கடந்த 1-ந்தேதி முதல் கடைகளில் கோக், பெப்சி பானங்கள் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. மக்களும், 15 லட்சம் வணிகர்களும் பெப்சி, கோக் பானங்களின் விற்பனையை முழுமையாக புறக்கணித்து வருகின்றன.
பாலக்காடு
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பெப்சி, கோக் நிறுவனம் பானங்கள் தயாரிக்க நிலத்தடி நீர் எடுப்பதால், கடும் வறட்சியை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன, வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
விற்பனைக்கு தடை?
ஆதலால், தமிழகத்தில் வர்த்தகர்கள் சங்கம் செய்ததைப் போல், கேரள வர்த்தகர்களும் பெப்சி, கோக் விற்பனை செய்யமாட்டோம் என்று முடிவு எடுக்க உள்ளனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் நிலத்தடி நீர் எடுப்பதைத் தடுக்கவும், வறட்சியில் இருந்து மாநிலத்தைக் காக்கவும் இந்த முடிவை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இளநீர் விற்பனைக்கு மாறுவோம்
இது குறித்து கேரள வியாபாரி விவசாயி ஏகோபன சமிதி தலைவர் டி. நஸ்ரூதீன்கூறுகையில், “ பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிப்பது குறித்த எங்கள் முடிவை அடுத்த வாரம் முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தபின் அறிவிப்போம்.
ஒரு பகுதி வர்த்தகர்கள் இந்த முடிவை ஆதரித்து வருகிறார்கள். நாங்கள் பெப்சி, கோக் விற்பனை செய்யமாட்டோம் என்று அறிவித்துவிட்டால், ஏறக்குறைய 7 லட்சம் வியாபாரிகள் விற்பனை செய்யமாட்டார்கள். அதற்கு பதிலாக இளநீரை கடைகளில் விற்போம்'' எனத் தெரிவித்தார்.
