தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி தானே நடைபெறுகிறது கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 குற்றவாளி என்றால் அவரை சிறையில் அடைக்க வேண்டியது தானே என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தேவர் ஜெயந்திக்காக மதுரையில் வங்கியிலிருந்து எடுத்து வரப்பட்ட தங்க கவசத்தை மீண்டும் வங்கியில் ஒப்படைத்த பின்னர் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னால் பிறந்தவர். அந்த ஒரு தகுதியை தவிர அதிகமான தகுதி கொண்டவர் எடப்பாடி பழனிசாமி.

யாராவது முதலமைச்சர் வாய்ப்பு வந்தால் விட்டுக் கொடுப்பார்களா..? வந்த வாய்ப்பை எதற்கு விட வேண்டும்? இது தெய்வத்தின் தீர்ப்பு. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்து கொடநாடு வழக்கு நடக்கிறது. தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது. கொடநாடு வழக்கில் பழனிசாமி தான் முதல் குற்றவாளி என்றால் அவரை கைது செய்ய வேண்டியது தானே.. சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை ஜெயிலில் போடாமல் ஏன் இருக்கிறார்கள்?

அனைவரும் சட்டப்படி பொதுக்குழு கூட்டி நீக்கப்பட்டவர் ஓபிஎஸ். சசிகலா மற்றும் மூன்று பேருக்கும் ஒரு மாதத்திற்குள் என்ன ஆகிறது என்று Wait & see... யாரும் மன்னிப்பு கேட்க வேண்டாம் மீண்டும் அவர்களை சேர்க்க முடியாது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடன் இருக்கும் தொண்டர்கள் மன்னிப்பு கேட்டால், ஆலோசித்து சேர்க்கப்படும். இவர்களால் அதிமுகவிற்கு எந்த பலவீனமும் கிடையாது. நாங்கள் ஸ்டெடியாக இருக்கிறோம். முதல் கோணல் முற்றிலும் கோணல். செங்கோட்டையன் அதிமுகவில் ராஜாவாக இருந்தார் தற்போது அவரிடம் கூஜா தூக்கி வருகிறார்" என்றார்.