died case who attack AIADMK mla 2 and half an hours investigation in Central jail
வேலூர்
அதிமுக எம்.எல்.ஏ.வை தாக்கியவர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக வேலூர் மத்திய சிறையில் நீதிபதி கனகராஜ், அதிகாரிகள், சக கைதிகள், மத்திய சிறையில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் என அனைவரிடமும் 2½ மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம். இவர் கடந்த 21-ஆம் தேதி போளூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரை, வசந்தம்மணி என்கிற மணிகண்டன் (41) என்பவர் கன்னத்தில் அடித்தார்.
இது குறித்து போளூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து வசந்தம் மணியை கைது செய்து 22-ஆம் தேதி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு 23-ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வசந்தம் மணிக்கு மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
பின்னர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து 25-ஆம் தேதி மீண்டும் சிறைக்கு சென்றார்.
இந்த நிலையில், 26-ஆம் தேதி சிறையில் அவர் மயங்கி விழுந்ததால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி 31-ஆம் தேதி இறந்து விட்டாராம்.
வசந்தம்மணி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவருடைய மனைவி சுமிதா மற்றும் உறவினர்கள் போளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால், அவர்கள் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அனுப்பிவிட்டனர். இதனால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வசந்தம் மணி இறந்தது குறித்து சிறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வேலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முன்னிலையில், வசந்தம்மணியின் உடல் கூராய்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது அங்கு வந்த வசந்தம்மணியின் மனைவி சுமிதா, எம்.எல்.ஏ.வை கைது செய்யும் வரை உடற்கூராய்வு செய்யக்கூடாது என்றும், உடலை வாங்க மாட்டோம் என்றும் நீதிபதியிடம் கூறினார்.
மேலும், அவர் நீதிபதி கனகராஜிடம் கொடுத்த மனுவில் “சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர இருக்கிறேன். நீதிமன்ற உத்தரவு வரும் வரை உடற்கூராய்வு பரிசோதனை செய்யக்கூடாது, உடலையும் வாங்க மாட்டோம். அதுவரை மருத்துவமனையில் உடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து வசந்தம்மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் விரைவு நீதிமன்ற நீதிபதி கனகராஜ், நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது வசந்தம் மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும்போது எப்படி இருந்தார்? அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது? மருத்துவமனையில் எந்த மாதிரியான சிகிச்சையளிக்கப்பட்டது? அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
இரண்டாவது நாளாக நேற்று மீண்டும் மத்திய சிறைக்கு சென்ற நீதிபதி கனகராஜ் சிறைத்துறை அதிகாரிகள், வசந்தம்மணியுடன் இருந்த சக கைதிகள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றவர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதற்காக பகல் 12 மணிக்கு சிறைக்கு சென்றவர் சுமார் 2½ மணி நேரம் விசாரணை நடத்தி விட்டு பிற்பகல் 2.30 மணிக்கு வெளியே வந்தார். பின்னர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை நடத்தினார்.
