Asianet News TamilAsianet News Tamil

கோயிலில் பிரசாதம் வழங்கப்படாததால் பக்தர்கள் ஆத்திரம்; அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...  

devotees angry not giving offering and held in argument with officials
devotees angry not giving offering and held in argument with officials
Author
First Published Jun 25, 2018, 8:04 AM IST


கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் உள்ள சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதியில் பிரசாதம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அடியார்கள் மற்றும் பதி நிர்வாகிகள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமியின் தலைமைப்பதியில் வரவு, செலவு கணக்குகளை நிர்வகிக்க கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதனடிப்படையில் கடந்த 21-ஆம் தேதி முதல் அறநிலையத் துறையினர் தலைமைப்பதிக்கு சென்று, கணக்குகளை நிர்வகித்து வருகின்றனர்.

நாள்தோறும் மதியம் 1 மணிக்கு ஐயா வைகுண்டசாமிக்கு சாமிதோப்பு தலைமைப் பதியில் சிறப்பு பணிவிடையும், அதனைத் தொடர்ந்து உச்சிப்படிப்பும், அதன்பின்னர் அடியார்களுக்கு பிரசாதமாக சந்தனபால், பழம், பாக்கு, வெற்றிலை, இனிப்புகள் போன்றவையும் வழங்கப்படுவது வழக்கம். 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று தலைமைப்பதியில் அடியார்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. வழக்கம்போல மதியம் 1 மணிக்கு உச்சிப்படிப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் அடியார்களுக்கு பிரசாதம் வழங்க மறுத்துவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அடியார்கள் தலைமைப்பதி நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளனர்.

தலைமைப்பதி நிர்வாகிகள் அதிகாரிகளிடம் சென்று, "பதியின் ஆகம விதிப்படி அடியார்களுக்கு பிரசாதம் வழங்க வேண்டும். அதை ஏன் வழங்கவில்லை" என்று கேட்டுள்ளனர். 

இதனால், அதிகாரிகளுக்கும், பதி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர், நிர்வாகிகள் ஆகம விதிப்படி பதியில் நடைபெறும் வழிபாடுகளையும், செயல்பாடுகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும். அதில் எந்தவித குறைபாடும் இருக்க கூடாது என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதிகாரிகளும் அதனை ஏற்றுக் கொண்டனர். 

கோயிலில் பிரசாதம் வழங்கப்படாததால் அடியார்கள் ஆத்திரமடைந்து வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவத்தால் தலைமைப்பதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios