தேனி

 

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 50-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.3 கோடி அளவில் பணம் பெற்று மோசடி செய்த வாலிபரை, பாதிக்கப்பட்டவர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

தேனி மாவட்டம், பழைய டி.வி.எஸ். சாலையில் உள்ள அமீர்உசேன் என்பவரின் மகன் ஹக்கீம் பாட்ஷா (29) என்பவர், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் அலுவலகம் நடத்தி வந்தார்.

 

அவர் பலரிடம் இலட்சக்கணக் கில் பணம் பெற்றுவிட்டு, வெளிநாட்டில் வேலை வாங்கி தராமல் மோசடி செய்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிலர் புகார் கொடுத்தனர்.

 

அந்த புகார் அளித்திருப்பதை அறிந்துகொண்ட அவர் தலைமறைவாகிவிட்டாராம். இந்த நிலையில், தேனி பங்களாமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஹக்கீம் பாட்ஷா நின்று கொண்டிருப்பதை, அவரிடம் ஏமாந்த சிலர் பார்த்துள்ளனர். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்தனர்.

 

பின்னர் அவரை தேனி காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று காவலார்களிடம் ஒப்படைத்தனர். தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர்.

 

காவல் ஆய்வாளர் முருகானந்தம் அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர்களிடம் ஹக்கீம் பாட்ஷாவை ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.

 

இதனையடுத்து பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

 

இதில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள எட்டப்பராஜபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் குபேந்திரன் (33) அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் லாவண்யா வழக்குப்பதிந்து ஹக்கீம் பாட்ஷாவை கைது செய்தார்.

 

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், தென்கொரியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடமும் பணம் பெற்று மோசடி செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து காவலாளர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.