முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு நிற்க வேண்டாம் என தடை விதித்தால், அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்றுடன் 73வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோ தெரபி பெண் நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இன்றுடன் 73வது நாளாக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறுகிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமாக வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டர்கள் பூஜைகள் நடத்துவது வழக்கமாக இருந்தது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்று அவர்களுடன் வரும் உறவினர்களுக்கு அசவுகர்யமாக இருந்தது.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனை முன்பு யாரும் இருக்க வேண்டாம் என கேட்டு கொண்டதுடன், தடை விதித்தது. இதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று முக்கிய பிரமுகர்கள் வரவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் வருகையும் அடியோடு குறைந்திருந்தது.
