பிரதமர் குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாஜக சார்பில் புகார்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாஜக சார்பில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் புகார் கொடுத்துள்ளார்.
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாஜக சார்பில் தமிழகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த திமுக செயல் வீரர்கள் கூடத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதற்காக இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் முக்கிய தலைவர்களான காமராஜர், மூப்பனார், ஜெயலலிதா ஆகியோரைக் குறிப்பிட்டு பேசினார். காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் தனக்கு உத்வேகம் அளித்தது என்றும் சொன்னார்.
இதனை தமிழக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தார். சேலத்தில் பிரதமர் மோடி பேசியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "நீங்கள் டெல்லியில் காமராஜரைக் கொல்ல நினைத்த பாவிகள்" என்று சாடினார்.
ச்சை... பிரதமர்னு கூட பாக்காம இப்படியா பேசுறது... வீடியோவை ரிபீட் செய்து விமர்சிக்கும் அண்ணாமலை
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 24, 2024
அமைச்சரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக டி.ஜி.பி.யின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாஜக சார்பில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் புகார் கொடுத்துள்ளார். அதில், பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே, பாஜகவினர் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மெஞ்ஞானபுரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்திலும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே? திருச்சியில் திமுகவை சரமாரியாகத் தாக்கிய ஈபிஎஸ்!