Dengue and mysterious fever are mixed with a small one People are afraid of success
சேலம்
சேலத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிறுமியோடு சேர்த்து ஐவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். அடுத்ததுடுத்து நிகழும் உயிரிழப்பால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
சேலம் மாவட்டம், சேலம் மாநகரம், ஓமலூர், காடையாம்பட்டி, சலகண்டாபுரம், எடப்பாடி, கொங்கணாபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்
சேலம் மரவனேரியைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீதர் (13), பொட்டியபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஷாசினி (9), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி அகல்யா ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், சேலம் களரம்பட்டி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் முகமது மொய்தீன். இவரது 9 வயது மகள் ஆயிஷா. இவள் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 28-ஆம் தேதி கடுமையான காய்ச்சல் காரணமாக ஆயிஷா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். மருத்துவர்கள் அச்சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதிபடுத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஆயிஷா பரிதாபமாக உயிரிழந்தாள்.
எடப்பாடியை அடுத்த அங்காளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்வர் ஆனந்தன், கூலித் தொழிலாளி. மனைவி பானுமதி. இவர்களின் மகன் பழனிவேலாயுதம் (12). இவன், குஞ்சாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த வாரம் பழனிவேலாயுதம் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று 29-ஆம் தேதி வீடு திரும்பினான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பழனிவேலாயுதம் உயிரிழந்தான்.
மேச்சேரி அருகே உள்ள அரங்கனூரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது 3 வயது குழந்தை சத்யஸ்ரீ. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தாள்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு குழந்தை சத்யஸ்ரீ உயிரிழந்தாள்.
கொங்கணாபுரம் அருகே உள்ள தடையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (30). கல் உடைக்கும் தொழிலாளி. இவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனயில் சிகிச்சைப் பெற்றும் குணமாகவில்லை.
பின்னர், சேலம் அரசு மருத்துவமனயில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மர்ம காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து அவர் உயிரிழந்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிலைகாரர் என்கிற வெங்கடாஜலம் (65). தொடர்ந்து மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், கொங்கணாபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டு வந்தும் காய்ச்சல் குணமாகவில்லை.
இந்த நிலையில் எடப்பாடி அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்த வெங்கடாஜலம் நேற்று காலை உயிரிழந்தார்.
இப்படி மர்ம காய்ச்சலால் ஐவர் பலியான சம்பவர்ம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
