தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது வரை அனுமதி வழங்கப்படாததால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற 5ம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளார். கட்சி தொடங்கப்பட்ட பின்னர் விஜய் முதல் முறையாக தற்போது புதுச்சேரி செல்ல உள்ளதால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மேலும் கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் விஜய் தாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் கவனமாக மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே புதுச்சேரியில் விஜய்க்கு கணிசமான ரசிகர்கள் உள்ள நிலையில் அங்கு ரோட் ஷோ செல்ல திட்டமிட்டுள்ளார். காலாபட்டு முதல் கன்னியக்கோவில் வரை ரோட் ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே பொதுமக்களிடம் பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அம்மாநில டிஜிபியிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல் அலுவலகத்தில் முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில், “புதுச்சேரியில் ஏற்கனவே வாகனப்போக்குவரத்து மிகவும் நெருக்கடியான பகுதி. அப்படி இருக்கும் பொழுது விஜய்யின் ரோட்ஷோவுக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் அது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் ரோட் ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால் சில சட்ட சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க விஜய்க்கு திடல் போன்ற பகுதிகளில் அவர் பேச அனுமதி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், நிச்சயம் ரோட் ஷோ நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ரோட் ஷோ தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி சபாநாயகர் செல்வம், “கரூரில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட பிறகு புதுச்சேரியில் விஜய்யின் ரோட் ஷோவுக்கு அனுமதி மறுப்பது சரியான முடிவு தான். இங்கு மிகப்பெரிய சாலை அமைப்பும் கிடையாது. திடல் போன்ற பகுதிகளில் பொதுக்கூட்டமாக நடத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.