EPS Vs KC Palanisamy: என்னை பற்றியா அவதூறா பேசுற.. இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு!
ஜூன் 14ம் தேதி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் ஒருங்கிணைப்புக் குழு என்று ஆரம்பித்தால் அதற்கு அதிமுக சார்பாகப் பதில் சொல்ல வேண்டுமா? என கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும் எடப்பாடி பழனிசாமி மீது கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொறுப்பேற்றதை அடுத்து சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடப்பதே என கூறப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: ADMK : 60 பேரின் ஆவிகள் ஸ்டாலினையும், மா.சுப்பிரமணியத்தையும் சும்மா விடாது.!! இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்
இந்நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்கப் போவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி சசிகலா, தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் என தனி அணிகளாக இருப்பவர்களைப் பேச்சுவார்த்தை மூலம் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒருங்கிணைப்பு குழு குறித்து ஜூன் 14ம் தேதி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் ஒருங்கிணைப்புக் குழு என்று ஆரம்பித்தால் அதற்கு அதிமுக சார்பாகப் பதில் சொல்ல வேண்டுமா? என கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் ஒருங்கிணைப்புக் குழுவில் கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் இருக்கிறார். அவர் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்த போது கட்சியில் சேர்க்கப்பட்டவர். அதற்கு முன் கட்சியிலேயே இல்லாதவர் அதற்கு பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர், இந்த நபர் ஒருங்கிணைப்புக் குழுவில் இருக்கிறார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 24 மணி நேரம் தான் கெடு.. மன்னிப்பு கேட்கனும்- ராமதாஸ், அன்புமணிக்கு செக்.! திமுக எம்எல்ஏக்கள் வக்கீல் நோட்டீஸ்
இந்நிலையில் தன்னை பற்றியும், ஒருங்கிணைப்பு குழுவை பற்றியும் அவதூறு கருத்துகளை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி மனுத் தாக்கல் செய்தார். அவதூறு வழக்கு மீதான விசாரணை வரும் 26ம் தேதி நீதிமன்றத்தில் வர உள்ளது.