பஸ், ரயில் நிலையங்களில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து இன்று 3,979 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி படிப்பு, வேலை, வியாபாரம், தொழில் உள்பட பல்வேறு காரணங்களுக்காக, வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்கியுள்ள பலர், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களாக சொந்த ஊருக்கு புறப்படுகின்றனர்.

இதுபோன்ற பண்டிகை காலங்களில்,கூட்ட நெரிசல் சிக்கி அவதிப்படாமல், மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய அரசு திட்டமிட்டது. அதன்படி இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 21, 289 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும், இதில் சென்னையில் இருந்து மட்டும் 11, 225 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்தது.

இதையடுத்து அதன்படி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 3,254 சிறப்பு பஸ்கள் நேற்றுமுன்தினம் இயக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளி–கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான கூட்டம் நேற்று அலைமோதியது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பயணிகள் வசதிக்காக நேற்று சென்னையில் அண்ணாநகர் (மேற்கு), கோயம்பேடு மாநில தேர்தல் ஆணைய அலுவலக பஸ் நிலையம், தாம்பரம் சானடோரியம் அண்ணா பஸ்நிலையம் (மெப்ஸ்), பூந்தமல்லி ஆகிய 4 தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து 3, 992 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 1,979 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 

கடந்த 2 நாட்களை காட்டிலும் இன்று பயணிகள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாலும், சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்கள் மூலமாக பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதாலும் பைபாஸ் சாலைகளில், நேற்று மாலை முதலே போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது.

புறநகர் பகுதியான தாம்பரம் – வண்டலூர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒவ்வொரு வாகனமும் மணி கணக்கில் ஊர்ந்து சென்றன.

பஸ் நிலையங்களை போன்று ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், சென்டிரலில் இருந்து வட மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரயில் படிக்கட்டுகளிலும் பலர் தொங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

இதற்கிடையில், பஸ் மற்றும் ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், பயணிகள் உடைமைகளில் பட்டாசுகளை மறைத்து வைத்து கொண்டு செல்கிறார்களா? என்பதை போலீசார் சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.