எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அதிமுக… தீபா ஆதரவாளர்கள் தொடங்கிய புதிய கட்சி…

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர்கள் ஈரோட்டில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயரிடப்பட்டுள்ள அக்கட்சிக்கு புதிய கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக வின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுள்ளார். ஆனால் சசிகலாவுக்கு அடிமட்டத் தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதிமுக வுக்கு தலைமை ஏற்க வேண்டும் என தொண்டாகள் போரிக்கை விடுத்து வருகின்றனர். தீபாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பேனர்களும், வால் போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளன. 

தமிழகம் முழுவதும் தீபாவுக்கு ஆதரவாக புதிய புதிய அமைப்புகள் கட்சிகள் என தொடங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஈரோட்டில் நேற்று, தீபா ஆதர வாளர்கள், புதிய கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்தனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என, கட்சிக்கு பெயரிட்டுள்ளனர்.

கறுப்பு, சிவப்பு, நடுவில் வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளை பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றுள்ளன; இரட்டை ரோஜாவை சின்னமாகவும் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடு மற்றும் கட்சியை காப்பாற்ற, ஜெ. தீபாவை, தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் கிளைகளை உருவாக்கி, இரண்டு முதல், ஐந்து லட்சம்உறுப்பினர்களை சேர்ப்பது; ஜெ., வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை,நினைவு இல்ல மாக மாற்ற வேண்டும்; எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்' என்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், பெரியசோரகை பஞ்சாயத்தில் உள்ள, 42 அ.தி.மு.க., கிளை கமிட்டிகளில், 31 கிளைகள் கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக, தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 17ம் தேதிக்குள்,நங்கவள்ளி ஒன்றியத்தில், 300 தீபா பேரவை கிளை கமிட்டிகளை அமைத்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.