Kallakurichi Tragedy:விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 32ஆக உயர்வு! கண்ணீரில் மிதக்கும் கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இதை குடித்த பலருக்கு அடுத்து வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டது
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இதை குடித்த பலருக்கு அடுத்து வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டது. இதனையடுத்து 80க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: "அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதில், கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷ், பிரவின், சேகர், சுரேஷ், மணிகண்டன், மணி, தனக்கோடி, ஆறுமுகம், இந்திரா, கிருஷ்ணமூர்த்தி, நாராயணசாமி, ராமு, டேவிட், கந்தன், வடிவு , சுப்ரமணி உள்ளிட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை நேற்று இரவு 18ஆக அதிகரித்தது. இதில், பலரது கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டியை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, அதை விழுப்புரம் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் மெத்தனால் ரசாயன பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரம்: அரசு அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய தமிழ்நாடு அரசு!
இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த், புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ரஜத் சதுர்வேதி கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டார்.