கடலூர்

சமூக விரோதிகள், தென்பெண்ணை ஆற்றில் அபாயகரமான மருத்துவ கழிவுகளை கொட்டி, எரித்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கர்நாடகா மாநிலம், நந்திதுர்க்காவில் உற்பத்தியாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் வழியாக கடலூர் மாவட்டத்தில் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது தென்பெண்ணை ஆறு.

கடலூர் மாவட்டத்தில், கண்டரக்கோட்டையில் நுழையும் இந்த ஆறு வான்பாக்கம், அழகியநத்தம், மருதாடு, செம்மண்டலம் வழியாக கடலூரில் கடலில் கலக்கிறது.

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூரில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வரை தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. சாலையின் ஒருபுறத்தில் ஆறும், மற்றொரு புறத்தில் வயல்வெளியுமாக காட்சி அளிக்கிறது. 

ஆள் நடமாட்டம் குறைந்தளவில் இருக்கும் இந்தப் பகுதியை தற்போது சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி எரிப்பது, வீடுகளில் சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளைக் கொட்டுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஊசிகள், காலாவதியான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அபாயகரமான கழிவுகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இவற்றை மிகுந்த பாதுகாப்புடன் அழிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. 

இந்த நிலையில், அவற்றை தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் கொட்டி எரிக்கின்றனர். மேலும், மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வீசிவிட்டுச் செல்கின்றனர்.

இவ்வாறு அபாயகரமான கழிவுகளைக் கொட்டும் இடமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதி மாறி வருவகிறதுல் இதனைத்  தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கூறியது: "தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் மூலமாக எந்த மருத்துவமனையின் கழிவு என்பதைக் கண்டறிந்து ரூ. 1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், செப்டிக் டேங்க் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.