வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு: திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமீன்!
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினாவும் தங்களது வீட்டில் பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதன் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, தலைமைறைவான எம்.எல்.ஏ. மகனும், மருமகளும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்கள் இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் இருவரையும் ஆந்திரா அருகே தமிழக தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
FACT CHECK சேலத்தில் குழந்தைகளை கடத்த வந்துள்ள 400 வெளிநாட்டவர்கள்: உண்மை என்ன?
இதையடுத்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகனும், மருமகளும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.