கோயம்புத்தூர்

பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவது என்றார் கோவை மாநகர் மாவட்ட தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார்.

தலித்துகள் மீதான வன்முறையைக் கண்டித்தும், தலித் மற்றும் பழங்குடியினரின் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட காங்கிரசு சார்பில் சிவானந்தா காலனியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மூத்த தலைவர் சுப்பு காமராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், ம.தி.மு.க.வை சார்ந்த தியாகராஜன், கிருஷ்ணசாமி, நந்தகோபால், முருகேசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி கலையரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

உண்ணாவிரத போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர், "1989-ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சியின்போது, தலித் மக்களை காப்பாற்றுவதற்காகவும், பாதுகாப்பு அளிக்கவும் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்த சட்டம் தலித் மக்களுக்கு தேவையான பாதுகாப்பை அளித்தது. சமீபகாலமாக தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தாக்குதல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

பாஜக-வினர், வன்கொடுமை சட்டத்தை வலு இல்லாமல் ஆக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதற்காக காங்கிரசு கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது" என்று அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரசு நிர்வாகிகள் சரவணகுமார், ஹேமா ஜெயசீலன், கே.பி.எஸ். மணி, கணபதி சிவக்குமார், செல்வராஜ், பச்சைமுத்து, ராமசாமி, கிருஷ்ணசாமி, ராஜாமணி, துளசிராஜ், சௌந்தர்குமார், லாலிரோடு செல்வம், போஸ், ராம்கி, காயத்ரி, உமா மகேஸ்வரி, திலகவதி, வக்கீல் கருப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.