இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் உள்ள தனியார் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் தினமும் 2 இலட்சத்து 40 ஆயிரம் லிட்டர் குடிநீரை வீணாக்குவதால் அந்நிறுவனத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து கண்டித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சாயல்குடி சாலையில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில், 648 மெகாவாட் சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தனியார் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் உள்ள சூரிய மின் தகடுகளை கழுவுவதற்காக நாள்தோறும் சுமார் 2 இலட்சம் லிட்டர் குடிநீரை வீணடித்து வருவதால் அந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வாழ்வாதாரமின்றி செங்கப்படை, குண்டுகுளம், தாதக்குளம், ஊ.கரிசல்குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அண்டை மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், அந்த தனியார் நிறுவனம் இப்பகுதியில் குடிநீர் எடுக்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் நேற்று அந்தப் பகுதியில் உள்ள புதுக்கோட்டை, செங்கப்படை, தாதாகுளம், குண்டுகுளம், ஊ.கரிசல்குளம், செந்தனேந்தல், சீமனேந்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தட்டுப்பாட்டுக் காரணமாக இருக்கும் தனியார் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை கண்டித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் கமுதி மேற்கு ஒன்றியத் தலைவர் கண்ணன் கூறியது:

"தனியார் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்திற்காக கமுதி பகுதியில் இருந்து நாள்தோறும் 2 இலட்சத்து 40 ஆயிரம் லிட்டர் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் மூன்று ஆண்டுகளில் கமுதி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விடும்.

இதனை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசும் கண்டு கொள்ளாததால் மக்களையும், கிராம மக்களையும் திரட்டி விரைவில் அந்த நிறுவனத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.