அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், லாரியில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருச்சியில் இருந்து அரியலூருக்கு வழக்கம் போல வீட்டு உபயோக சமையல் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட நிலையில் கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை திருச்சியை சேர்ந்த நபர் ஓட்டி வந்துள்ளார். இதனிடையே வாகனம் கீழப்பழூர் அடுத்த வாரணவாசி அருகே வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நெடுஞ்சாலையில் திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தாகவும், நாய் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பிரேக் பிடித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து வித்துக்குள்ளானது. லாரி கவிழ்ந்ததும் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் சாலை, பள்ளத்தில் சரிந்து தீப்பற்றத் தொடங்கியது.

தீப்பற்றத் தொடங்கியதும் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் தனது செல்போனை எடுத்துக் கொண்டு தூரமாகச் சென்றதால் உயிர் தப்பினார். இதனைத் தொடர்ந்து மளமளவென எரியத் தொடங்கிய சிலிண்டர்கள், ஒன்றன் பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண் வருகின்றனர்.