தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் சேத மதிப்பே ரூ.25 ஆயிரம் கோடியை தாண்டும் என அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கஜா புயலின் பாதிப்பினால் மக்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதுவே ஒரத்த நாடு, சோழகன் குடிகாடைச் சேர்ந்த சுந்தர்ராஜனின் மரணத்திற்கு காரணமாக தெரிகிறது.

மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் உடனடியாக கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து உரிய நிவாரணம் படிப்படியாக கிடைக்கும் என்ற வாக்குறுதியை கூறினால் மட்டுமே மக்களை மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வர முடியும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்காமலேயே அவசரம் அவசரமாக டெல்லிக்கு போன எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியும், இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடியும் கேட்டு இருக்கிறார். இது போதுமானதல்ல.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் சேத மதிப்பே ரூ.25 ஆயிரம் கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இதை மனதில் வைத்து இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கோடியையாவது கேட்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.