நீட் தேர்வுக்கு, தமிழக அரசு அவசர சட்ட வரைவு கொண்டு வந்துள்ளது செல்லாது என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கூறியுள்ளதற்கு, அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நீட் தேர்வு நடத்தப்படுவதால், சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டும் பயன் பெறுவார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க முடியாது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் ஒத்தி வைக்க பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில், மத்திய அமைச்சர்களை சந்தித்து, நீட் தேர்வு விலக்கு குறித்து பேசிவந்தனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதைதொடர்ந்து இன்று டெல்லி சென்றுள்ள சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஎஸ்இ மாணவர்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது செல்லாது. இதை செயல்படுத்தினால், சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கூறியிருந்தார்.

இதற்கிடையில், தலைமை வழக்கறிஞர் வேணுகோபல், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூடிறியுள்ளார்.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், ராஜீவ் கொலை வழக்கில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை முன்கூட்டியே விடுவிக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்றும், தீர்ப்பு வெளியான பின்பு 2 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கும் என்றும் கூறினார்.