தமிழகப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Current grading system will continue in Tamil Nadu schools: Minister Anbil Mahesh sgb

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

வீட்டில் இருந்தே மாதம் 20,000 க்கு மேல் சம்பாதிக்கலாம்! சூப்பர் ஹிட் திட்டம் இதோ!

தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் மத்திய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாமல், நமது மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.

தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல, ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். கல்விதான் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் அடித்தளம். எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் திராவிட மாடல் அரசின் இலக்கு.

இந்த இலக்கை எய்தி, இந்தியத் துணைக் கண்டத்திற்கே, தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் தொடர்ந்து விளங்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து தொய்வின்றி, நமது அரசு முன்னெடுத்துச் செல்லும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வீட்டுக் கடன் வேணுமா? வங்கிகள் விதிக்கும் இந்தக் கட்டணத்தை நோட் பண்ணுங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios