சென்னையில் நடைபெற்ற மதி உணவுத் திருவிழா, சுய உதவிக் குழுக்களுக்கு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது. 8 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில், 4.5 இலட்சம் மக்கள் வருகை தந்து, ரூ.2.56 கோடி மதிப்பிலான பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட, மதி அங்காடி, மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம், இயற்கைச் சந்தைகள் மற்றும் விற்பனைக் கண்காட்சிகள் என பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற உணவுத் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் தந்த அபரிமிதமான ஆதரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் டிசம்பர் 21 அன்று சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் மதி உணவுத் திருவிழாவினைத் தொடக்கி வைத்தார்.

மதி உணவுத் திருவிழாவில், அமைக்கப்பட்டிருந்த 50 அரங்குகளில், 70 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150 மகளிர் உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறியதுடன், பல்வேறு வகையான உணவுப் பொருட்களையும் விற்பனை செய்தனர். சென்னை மக்களின் அபரிமிதமான வரவேற்பின் காரணமாகவும், பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் ஆகியவற்றை முன்னிட்டும் பெசன்ட் நகர் கடற்கரை மதி உணவுத்திருவிழா டிசம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டது. பொதுமக்கள் ஆதரவுடன் டிசம்பர் 21 முதல் 28 வரை 8 நாட்கள் வெற்றித்திருவிழாவாக நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவிற்கு, சுமார் 4.5 இலட்சம் பொதுமக்கள் வருகை தந்து, 2 கோடியே 56 இலட்சத்து 42 ஆயிரத்து 775 ரூபாய் மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் ஆயத்த உணவுகளை வாங்கிச் சென்றுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

மதி உணவுத் திருவிழாவிற்கு பெருமளவில் வருகை தந்து, சுய உதவிக் குழுக்கள் தயாரித்த உணவுப் பொருட்களை சுவைத்தும், வாங்கியும் சென்று அபரிமிதமான ஆதரவை நல்கிய அனைவருக்கும் சுய உதவிக் குழுக்களின் மகளிர் தங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். சென்னை மக்களின் மனதைக் கவர்ந்த, மதி உணவுத் திருவிழாவின் நிறைவு விழா டிசம்பர் 28 அன்று சென்னை, பெசண்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ள உணவுத் திருவிழா அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில், மதி உணவுத் திருவிழாவினை வெற்றிகரமாக்கிட செயல்பட்ட, மகளிர் திட்ட அலுவலர்கள், உதவித் திட்ட அலுவர்கள், பணியாளர்கள், சமுதாய வளப் பயிற்றுநர்கள், நகர்ப்புர வாழ்வாதார மையங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மதி உணவுத் திருவிழாவின் வெற்றிக்காக செயல்பட்ட, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், காவல்துறை, போக்குவரத்துக் காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, மின்சார வாரியம் ஆகியவற்றின் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மதி உணவுத் திருவிழா அரங்கில் 31.5 டன் ஈரமான மற்றும் உலர்ந்த குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, அவற்றில் 84 சதவிகித குப்பைகள் மறுசுழற்சி செய்திட அனுப்பப்பட்டுள்ளன. குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, விழா அரங்கினையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாகப் பராமரித்து, சுத்தத்தையும், சுகாதாரத்தையும் காத்திட்ட தூய்மைப் பணியாளர்களின் சிறப்பான சேவையினைப் பாராட்டி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், மதி உணவுத் திருவிழா அரங்கில் தினசரி சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தப்படாமல் உடனுக்குடன் சேகரிக்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட 200 லிட்டர் எண்ணெய்கள் விற்பனை செய்யப்பட்டதில் கிடைத்த 14,000 ரூபாய் சுய உதவிக் குழு மகளிருக்கே வழங்கப்பட்டது.

உணவுத் திருவிழாவில் நடைபெற்ற உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துவது, சுகாதாரமான முறையில் பரிமாறுவது, விற்பனை நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்களை எவ்வாறு களைவது போன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மகளிரின் மகிழ்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் சாதனைகளுக்கு மேலும் ஒரு வெற்றி மகுடமாக அமைந்துள்ளது.