- Home
- Tamil Nadu News
- ஜனவரி மாதத்தில் பள்ளிகளுக்கு கொத்தாக 15 நாட்கள் விடுமுறை.. சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
ஜனவரி மாதத்தில் பள்ளிகளுக்கு கொத்தாக 15 நாட்கள் விடுமுறை.. சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
School Holiday: 2026 ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு, பொங்கல் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் கிடைக்கவுள்ளன. மொத்தமாக 31 நாட்களில் சுமார் 15 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஓய்வு தான் சற்று மனதளவில் நிம்மதியை கொடுக்கும். எனவே எப்போது விடுமுறை கிடைக்கும் பள்ளி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வரை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
பள்ளி விடுமுறை நாட்கள்
இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த நிலையில் அந்த மாதம் முழுவதும் வார விடுமுறை தவிர்த்து கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கவில்லை. ஜூலை மாதத்தில் மொகரம் பண்டிகை விடுமுறை வந்தது. ஆனால் அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால் எந்த வித பயனும் இல்லாத மாதமாக ஜூலை மாதம் அமைந்தது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை கிடைத்ததால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
காலாண்டு தேர்வு விடுமுறை
செப்டம்பர் மாதமும் மாணவர்களுக்கு குஷியான மாதமாகவே அமைந்தது. அதாவது செப்டம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபி விடுமுறை மற்றும் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்கள் வந்தது. இதனையடுத்து செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது. வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும் நிலையில் இம்முறை 9 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதில் சரஸ்வதி பூஜை, விஜய தசமி, காந்தி ஜெயந்தி, விடுமுறைகள் அடங்கும். மேலும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
அரையாண்டு தேர்வு விடுமுறை
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் போதிய விடுமுறைகள் கிடைக்கவில்லை. ஆனால் அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24 முதல் ஜனவரி 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2026ம் ஆண்டு புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில் ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்பதை பார்ப்போம். ஜனவரி மாதத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை 4 நாட்கள் வந்து விடுகிறது. பிறகு வார விடுமுறை ஜனவரி 10 மற்றும் 11ம் தேதி வருகிறது.
ஜனவரி மாதம் விடுமுறை
ஜனவரி 15 வியாழக்கிழமை தை பொங்கல், ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள் வருகிறது. ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 14ம் தேதி புதன் கிழமை போகி என்பதால் அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்த விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
மொத்தம் 15 நாட்கள் விடுமுறை
பின்னர் ஜனவரி 24 மற்றும் 25ம் தேதி வார விடுமுறையும், ஜனவரி 26ம் தேதி திங்கள் கிழமை குடியரசு தினமும் வருவதால் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. ஜனவரி 31ம் தேதி சனிக்கிழமை விடுமுறை வருகிறது. மொத்தமாக 31 நாட்கள் கொண்ட ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை வருவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

