திருவள்ளூர்,

பணிச்சுமை காரணமாக இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விஏஒ-க்கு நீதி வேண்டும் என்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மாரி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் தர்மன், மாவட்ட துணை செயலாளர்கள் பிரபு, பிரேம்குமார், சகாயநிர்மலா, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள், “தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, தலையாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய வெங்கடேசன் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் பணிச்சுமைதான் என தெரிகிறது. எனவே, தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்.

வெங்கடேசன் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை ரூ.50 இலட்சம் வழங்க வேண்டும்” போன்ற கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதில் மாவட்ட துணைத் தலைவர் ரவி, அமைப்பு செயலாளர் சுந்தர், பிரசார செயலாளர் பாக்கியசர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ரவி நன்றித் தெரிவித்தார்.