அ.தி.மு.க.வின் ஆட்சி என்றால் சமூக விரோதிகள் வாலை சுருட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்! என்பார்கள். காரணம் போலீஸுக்கு அவ்வளவு அதிகாரத்தை கொடுத்து, ரெளடிகளை ரவுண்டு கட்டி அடக்கி வைக்க சொல்லியிருப்பார். 

இப்போது நடப்பது அ.தி.மு.க. ஆட்சிதான் ஆனால்  ஜெயலலிதா இல்லாத ஆட்சி. எடப்பாடி பதவியேற்ற இந்த ஒரு வருடம், சொச்சம் மாதங்களுக்குள் தமிழகம் முழுக்க ஏகப்பட்ட கிரிமினல்தனங்கள் கொத்துக் கொத்தாய் நிகழ்ந்திருக்கின்றன. கொலைகள், கொள்ளைகள், வழிப்பறிகள் என்று குற்றங்களின் அத்தனை வகைகளும் ரகம் ரகமாய் நடந்தேறி இருக்கின்றன. 

இந்நிலையில் கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஒரு தோப்பு அருகே, சீருடை அணிந்து சிலர் ஆயுத பயிற்சி எடுத்தனர் என்று ஒரு தகவல் பரவியது. இதையெல்லாம் பார்த்துவிட்டு மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக சட்ட ஒழுங்கு நிலை சீரழிந்து விட்டதாக கடும் விமர்சனத்தை முன் வைத்தார். இதற்கு இரு முதல்வர்களும் மறுப்பு தெரிவித்து ‘தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது.’ என்றனர்.

ஆனாலும் ரெளடியிஸம் கட்டவிழ்ந்து போய்க் கொண்டிருப்பது, உளவுத்துறை மூலம் அதிகார மையத்தின் கவனத்துக்குப் போக, கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் இரண்டு ரெளடிகளை எண்கவுண்டரில் போட்டுத் தள்ளினார்கள். ஆனாலும் கூட அடங்கவில்லை குரூரங்கள். 

ரெளடிகளின் குற்றங்கள்தான் அதிர்ச்சியை தருகிறதென்றால் திருச்சியில் போலீஸே நடத்திய குரூரம் தமிழகம் எந்த திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்று மக்களை விக்கிட வைத்த உச்சம். 

இந்நிலையில் இன்று சென்னை கே.கே.நகரில் கல்லூரி மாணவி அஸ்வினி, பகலில் ஆள் நடமாட்டங்களுக்கு மத்தியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். சென்னையில் இரண்டு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட சுவாதி கொலை போல் இதுவும் இன்று நடந்து முடிந்திருக்கிறது. 
எதிர்கட்சியினரும், மக்களும், ஏன் இந்த அரசை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பி.ஜே.பி.யினருமே ‘ஓ! இதுக்குப் பேர்தான் அமைதிப்பூங்காவா?’ என்று முதல்வர்களை பார்த்துக் கேட்கிறார்கள். 
என்ன சொல்லப்போறீங்க இ.பி.எஸ். & ஓ.பி.எஸ்.?