cremated the body of Tirunelveli soldier who died in Assam with 21 bullets were fired

திருநெல்வேலி

அசாம் மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த திருநெல்வேலி இராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க அவருடைய மகன் கையால் எரியூட்டப்பட்டது. இந்த இறுதி ஊர்வலகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். 

திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு செல்வகுமார் (37), செல்லத்துரை (34), பெரியசாமி (32) ஆகிய மூன்று மகன்கள், திருமலைச்செல்வி (30) என்ற மகள் உள்ளனர். 

செல்வகுமாரின் மனைவி கவிதா, மகன் ராகுல் (10), மகள் பவித்ரா (8). செல்வகுமார் கடந்த 2001-ஆம் ஆண்டில் மெட்ராஸ் ரெஜிமென்டில் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். பின்னர் சமீபத்தில் ஹவில்தாரராக பதவி உயர்வு பெற்றார்.

இவர் கடந்த 22-ஆம் தேதி சக இராணுவ வீரர்களுடன் அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகளை தேடும் பணியை முடித்துவிட்டு ரோந்து வாகனத்தில் மீண்டும் முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து செல்வகுமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அசாம் மாநில இராணுவ அதிகாரி நாயப், சுபேதார் ஜெகன் தலைமையில் செல்வகுமாரின் உடலை விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், திருவனந்தபுரத்தில் இருந்து அவசர ஊர்தி மூலம் கலிங்கப்பட்டியில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று காலை 8.50 மணிக்கு செல்வகுமார் உடல் கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த செல்வகுமாரின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 

மேலும், ஏராளமான மக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செல்வகுமாரின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உதவி ஆட்சியர் மைதிலி, 

திருவேங்கடம் தாசில்தார் லட்சுமி, மனோகரன் எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் செல்வகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் இராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் செல்வகுமாரின் மனைவி கவிதாவிடம் ரூ.20 இலட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர்.

இதனையடுத்து இராணுவ வீரர்கள் அணிவகுத்து வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் செல்வகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாரின் உடலுக்கு அவருடைய மகன் ராகுல் எரியூட்டினார்.

இந்த இறுதி ஊர்வலத்தில் ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், நிஜாம், திருவேங்கடம் மண்டல துணை தாசில்தார் கனகராஜ், நெல்லை முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் முருகன், வருவாய் ஆய்வாளர் முத்துப்பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், மக்கள் திரளாக பங்கேற்றனர்.