பெரம்பலூர்

உரிய காலத்தில் வரி செலுத்தாதவர்களின் சொத்துக்களின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரப்படும் என்று பெரம்பலூர் நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஸ்ரீபிரகாஷ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். 

அதில், "பெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், பாதாள சாக்கடை வைப்புத்தொகை மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உரிய காலத்தில் மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். 

அதனை செலுத்தாதவர்கள் சொத்துக்களின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரப்படும். மேலும், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் நகராட்சி கடைகளை குத்தகை எடுத்து குத்தகை செலுத்தாதவர்கள் கடை உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மக்களின் நலன்கருதி பழைய மற்றும் புதிய நகராட்சி அலுவலகங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரி வசூல் செய்யப்படும். 

மேலும், மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உரிய காலத்தில் செலுத்தி ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் நகராட்சி மக் களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி மற்றும் தெருவிளக்கு வசதி ஆகியவற்றை செய்து தரும்" என்று அவர் கூறியுள்ளார்.