ஊரைவிட்டு ஒதுக்கிய பஞ்சாயத்து; மனமுடைந்த தம்பதி தீக்குளிக்க முயற்சி - பரபரப்பில் பற்றி எரியும் கலெக்டர் ஆஃபிஸ்...
பஞ்சாயத்தார்கள் தங்களது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் மனமுடைந்த தம்பதி நாகப்பட்டினம் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சித்தனர்.
பஞ்சாயத்தார்கள் தங்களது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் மனமுடைந்த தம்பதி நாகப்பட்டினம் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சித்தனர். நல்ல வேளையாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் வேலுமணி தலைமை வகித்தார்.
ஒவ்வொரு வாரக் கூட்டத்தின்போதும் ஆட்சியரகத்திற்கு வரும் பொதுமக்கள் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், நேற்று நடந்த கூட்டத்திற்கு வந்த மக்கள் அனைவரையும் பலத்த சோதனைக்குப் பிறகே காவலாளர்கள் ஆட்சியரகத்திற்குள் அனுமதித்தனர்.
இந்தக் கூட்டத்திற்கு திருவெண்காடு, கிழமூவர்கரை, மாரி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் (51) மற்றும் அவரது மனைவி கனியமுது (42) ஆகியோர் வந்தனர். காவலாளர்கள் பரிசோதிப்பதை பார்த்த இவர்கள் ஆட்சியரகத்தின் வெளியே நின்றுக் கொண்டு தங்கள் பையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தங்களது உடலில் ஊற்றிக் கொண்டனர்.
பின்னர், தீ வைத்துக் கொள்ள முற்பட்டனர். இதனைக் கண்ட காவலாளார்கள் ஓடிச்சென்று அவர்களை தடுத்தனர். பின்னர், அவர்கள் மேல் தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில், "கீழமூவர்கரை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தங்களது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முடிவெடுத்தோம்" என்றனர். பின்னர், ஆட்சியரிடம் இதுகுறித்து மனு கொடுத்துவிட்டு செல்லுங்கள். அவர் இந்தமுறை நடவடிக்கை எடுப்பார் என்று அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
ஊரைவிட்டு ஒதுக்கியதால் மனமுடைந்த தம்பதி தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகமே பரபரப்பில் பற்றி எரிந்தது.