எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று பெருமை பேசிய மு.க.ஸ்டாலின், இதுதான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள் (65). இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தம்பதி கொலை

இந்நிலையில் தோட்டத்தில் தனியாக வசித்த பெற்றோரை கடந்த இரண்டு நாட்களாக மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகன் அருகிலிருந்தவர்களிடம் பார்க்கச் சொல்லி உள்ளார். அப்போது வீட்டிற்கு சென்று பார்த்த போது இருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

 15 பவுன் நகைகள் கொள்ளை

உடனே இதுதொடர்பாக ராமசாமி மகனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் தங்க வளையல் உட்பட 15 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?

இதுதொடர்பாக அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்:

* 1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.

* 9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

* 29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.

* 13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.

* 14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.

இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்" என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த கொலை- கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என இபிஎஸ் கூறியுள்ளார்.