காஞ்சிபுரம்

கேளம்பாக்கத்தில் மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கியவரை கைது செய்யக்கோரி பேருந்துகளை நடுவழியில் நிறுத்திப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூரில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று மாலை சென்னை மாநகர பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

அந்தப் பேருந்தை ஓட்டுநர் பாலு என்பவர் ஓட்டி வந்தார். கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் மார்க்கமாக பேருந்து சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் பேருந்தை முந்திச் செல்ல முயன்றாராம்.

அப்போது, அந்த இளைஞருக்கும், ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த இளைஞர், ஓட்டுநர் பாலுவை சரமாரியாக தாக்கினாராம்.

இதனால் ஓட்டுநர் பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு இச்சம்பவம் குறித்து சக மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். கேளம்பாக்கத்தில் நடுவழியில் ஆங்காங்கே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளை நிறுத்தப் போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மேலும், ஓட்டுநர் பாலுவுக்கு ஆதரவாக 100–க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கேளம்பாக்கம் பழைய மாமல்லபுரம் சாலை ஓரமாக பேருந்துகளை நிறுத்தி அம்பேத்கர் சிலை அருகே போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த கேளம்பாக்கம் காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே ஓட்டுநரைத் தாக்கிய இளைஞர் குறித்து விசாரணை நடத்தியதில் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி (28) என்பது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் பாலு மற்றும் நடத்துநர் அருணாச்சலம் அளித்த புகாரின்பேரில் கேளம்பாக்கம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து வேலுச்சாமியை கைது செய்தனர்.